சென்னை பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னை ரயில்வே கோட்டத்தில் புறநகர் மின்சார ரயில்களின் கால அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது
இந்தப் புதிய கால அட்டவணை நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவைகளுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதலும், வார நாட்களுக்கான சேவைகளுக்கு, நவம்பர் 2-ஆம் தேதி முதலும் புதிய அட்டவணை அமல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி,
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில், திருவள்ளூரில் இருந்து சென்னை மூர்மார்க்கெட் வளாகத்துக்கு மதியம் 12.25 மணிக்குப் புதிய மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும், சில ரயில்களின் சேவைகள் திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன
சென்னை மூர்மார்க்கெட் – அரக்கோணம் வழித்தடத்தில் இரவு நேரத்தில் இயக்கப்படும் இரண்டு மின்சார ரயில்களின் வேக வகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை வழித்தடத்திலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மூர்மார்க்கெட்டில் இருந்து அதிகாலை 5.20 மணிக்குப் புறப்படும் ரயில் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும். அதேபோல், சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்குப் புறப்படும் ரயில் சென்னை மூர்மார்க்கெட் வளாகம் வரை இயக்கப்படும்.
மேலும், அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்குச் செல்லும் அரை விரைவு மின்சார ரயிலுக்கு கூடுவாஞ்சேரியில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கூடுவாஞ்சேரியை காலை 9.20 மணிக்கு வந்தடையும். சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவைகளின் நேரத்தில் மாற்றம் இல்லை
ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் கால அட்டவணையிலும் மாற்றம் செய்யப்படவில்லை பயணிகள் புதிய ரயில் நேரங்கள் மற்றும் இடைநிலை நிறுத்தங்கள் குறித்த விவரங்களை NTES செயலி மூலம் சரிபார்த்து, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.




