பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் வந்தியதேவனாக நடித்துள்ள கார்த்தியின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் புரொமொஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய அப்டேட்களை தற்பொழுது படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் தோற்றம் அடங்கிய புகைப்படத்தை நேற்று படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து வந்தியதேவனாக நடித்துள்ள கார்த்தியின் புதிய புகைப்படத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பான் இந்தியா படமாக இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விக்ரம் மற்றும் கார்த்தியின் கதாப்பாத்திரங்கள் வெளியாகியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதாபாத்திரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– தினேஷ் உதய்










