ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்தவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நடராஜின் உயிரிழப்பு ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-ஆவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது!” என்றும்,
https://twitter.com/draramadoss/status/1537683037290303488
“ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது எவ்வளவு அவசியம், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும், கோரிக்கைகளும் எவ்வளவு நியாயமானவை என்பதற்கு இந்த நிகழ்வுகளை விட சரியான எடுத்துக்காட்டுகள் தேவையில்லை!” என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் பெற்று உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கட்டந்த இரு தினங்களுக்கு முன்னர், “ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விளம்பரங்களை வெளியிடக்கூடாது” என ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








