அதிமுக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 
உட்கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன், அதுதொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். 
அதிமுக ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான நியமனத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி
நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடைபெற உள்ள பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எட்ப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக தமது மனுவில் குற்றம்சாட்டியுள்ள பாலகிருஷ்ணன், எனவே இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.
அதிமுக உட்கட்சி தேர்தல் அலுவலர்களான பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் நடந்து முடிந்த அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் பாலகிருஷ்ணன் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்த மனுவை எண்ணிடும் பணி நடைமுறைகள் முடிந்த பிறகு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.







