என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான் என ஸ்டேட்டஸ் வைத்து விட்டு ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை இரயில் நிலையம் அடுத்த கீரைத்தோட்டம் என்னும்
பகுதியின் அருகே உள்ள இரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் உடல் சிதைந்து
கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து திருச்சியிலிருந்து
சம்பவ இடத்திற்கு போலீசார், ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞர் யார் என விசாரணை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விசாரணையில், உயிரிழந்த இளைஞர், வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் அடுத்த மலையாண்டிப் பட்டியை சேர்ந்த ரவியின் மூத்த மகன் 22 வயதுடைய சந்தோஷ் என்பது தெரியவந்தது. பொறியியல் படிப்பில் நான்காம் ஆண்டு B.E (EEE) படித்து வந்த சந்தோஷ், கடந்த 6 மாத காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி வீட்டிலிருந்து நகை, பணம் ஆகியவற்றை வீட்டிற்கு தெரியாமல் எடுத்து சென்று விளையாட்டில் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (அக்-4) வீட்டிலிருந்த மோதிரம் காணவில்லை என்று பெற்றோர் சந்தோஷிடம் செல்போனில் பேசி கேட்டுள்ளனர். அதற்கு நான் நகை, பணத்துடன் வருகிறேன் என கோபமாக பேசியுள்ளார் சந்தோஷ். அதன்பின் நேற்று (அக்-5) இரவு 9.50 மணியளவில் “என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான், அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என ஸ்டேட்டஸ் வைத்து விட்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். அதன் பின் சந்தோஷை பெற்றோர் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தான் சந்தோஷ் இரயில் முன் பாய்ந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஷ் உடலை கைப்பற்றியுள்ள திருச்சி இரயில்வே போலீசார் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற உயிர்களை சூரையாடுவது ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல, ஆன்லைன் கொடூர
விளையாட்டுகளும் தான், PUBG GAME, BLUE WHALE போன்றவைகளுக்கு தடை வந்தாலும்
புதுப்புது பெயர்களில் இன்னமும் ஆன்லைன் கொடூர விளையாட்டுகள் இன்றைய
இளைஞர்களின் கைகளில் தவழ்ந்துகொண்டு தான் இருக்க செய்கிறது.
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடைக்கு அமைச்சரவை ஒப்புதல் பெற்றுள்ள நிலையில் அதை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே சந்தோஷ் பெற்றோர் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.