மதுரையில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.150 முதல் 180-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதை தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலையும் கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தக்காளியை போன்றே கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று வரை ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் இன்று ஒரே நாளில் ரூ.30 அதிகரித்து மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. உழவர் சந்தையில் நேற்று நூறு ரூபாய்க்கும் குறைவாக சின்ன வெங்காயத்தின் விலை இருந்து வந்த நிலையில், இன்று மொத்த வியாபாரிகள் ரூ.180க்கும், சில்லறை வியாபாரிகள் ரூ.190க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை நெல்பேட்டை வெங்காய மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் (மொத்த விற்பனை) 150 முதல் 180 ரூபாய்க்கும், சில்லரை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ 190 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பெரிய வெங்காயம் கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து வரதுக்கு குறைந்ததன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதேபோல் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய தக்காளியின் விலை கிலோ 80 முதல் 130 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் வரத்து குறைவினாலும், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி அங்கு மழையின் காரணமாக தேக்கம் அடைந்து சேதம் அடைந்துள்ளதால் இன்னும் ஒரு மாதத்திற்கு இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தக்காளி, சின்ன வெங்காயத்தை தொடர்ந்து இஞ்சி, பச்சை மிளகாய் விளையும் உயர்ந்து அதே நிலை நீடிக்கிறது. இதனால் இஞ்சி கிலோ 280 முதல் 300 ரூபாய் வரையிலும், பச்சை மிளகாய் கிலோ 100 முதல் 120 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








