திருவாரூர் அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் வீடு புகுந்து இளைஞரை வெட்டிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். வெட்டுபட்ட இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கிராமத்தில், விஜயகுமார் என்பவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரது 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த முகம்மது பெமினாஸ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி அந்த சிறுமியை முகம்மது பெமினாஸ் வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதுடன் பாலியல் தொந்தரவு கொடுத்தாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தமது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோரான விஜயகுமார் – தீபா தம்பதி, முகம்மது பெமினாசின் வீட்டிற்குச் சென்று, கண்டித்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயகுமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, முகம்மது பெமினாசை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த முகம்மது பெமினாஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த முகம்மது பெமினாசின் உறவினர்கள், விஜயக்குமாரின் மருந்துக்கடையை சூறையாடினர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த விஜயகுமார் – தீபா தம்பதியை போலீசார் கைது செய்தனர். தீபா அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முகம்மது பெமினாஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.







