மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 2029 ம் ஆண்டு முதல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான 106-வது அரசியலமைப்பு திருத்த மசோதா குறித்து,நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மகளிருக்கு 280 இடங்களை ஒதுக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தி தொகுதி மறுவரையரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் அரசமைப்பு சட்டப்பிரிவு 81-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவின்படி மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு வழிவகுக்கும் வரைவு மசோதா தாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்புதல் வழங்கிய நிலையில் நேற்று உறுப்பினர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார். தற்போது தொடங்கியுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையாக முடிவடைய தாமதம் ஆகும் என்பதால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டாலும், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




