காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில், பெண்ணின் அண்ணனுக்குத் தூக்கு தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருத்தாச்சலம் குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் – கண்ணகி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் காதலித்து கடந்த 2003-ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். கடும் எதிர்ப்பு காரணமாக ஊரைவிட்டுச் சென்றனர். கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் கண்டுபிடித்து புதுக்கூரைப் பேட்டைக்கு அழைத்து வந்தனர். பின்னர் முந்திரித்தோப்பில் இருவருக்கும் விஷம் கொடுத்து எரித்து கொலை செய்தனர்.
இந்த வழக்கில், கண்ணகியின் தந்தை துரைசாமி, அவர் மகன் மருதுபாண்டியன், ரங்க சாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
2004ம் ஆண்டில் சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதி விசார ணை முடிக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
காட்டுமிராண்டித்தனமான கொலை என்று சாடிய நீதிபதி உத்தமராஜா, ஆணவத்துடனும் அச்சமற்ற தன்மையுடனும் குற்றங்களை செய்துள்ளனர் என தெரிவித்தார். அரிதினும் அரிதான இந்த வழக்கில், மற்றவர்கள் அச்சமடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே ஆணவக்கொலை செய்துள்ளனர் என வேதனையுடன் கூறினார்.
கொலை செய்யப்பட்ட கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்குத் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தமராஜா தீர்ப்பளித்தார். ஏக காலத்தில் குற்றவாளி தண்டனை அனுப விக்க வேண்டும் என கூறிய நீதிபதி, கண்ணகி எரித்ததாகத் தான் தமிழ் மண்ணின் வரலாறு உள்ளது எனவும், தற்போதைய சாதி ஆணவக்கொலை கண்ணகியால் எரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், வழக்கில் தொடர்புடைய, அப்போதைய விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் செல்ல முத்து மற்றும் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.







