சென்னை புரசைவாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் ஜிஇ கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணய்யா (37) என்பவர் நேற்றிரவு கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள கடையில் உணவு வாங்குவதற்காக சென்றார்.
அப்போது தேங்கியுள்ள மழைய நீரில் நடந்து வந்த போது மில்லர்ஸ் சாலை அரசு மதுபான கடைக்கு எதிரே தரையில் புதைக்கப்பட்டுள்ள மின்சார வயரில் மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி கிருஷ்ணய்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மழைக்காலங்களில் இதுபோல தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டுவருவதாகவும், இதனை தடுக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.








