அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விடக் கோரிய மனு நிராகரிப்பு!

அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், யானையை எங்கே விட வேண்டும் என்பதில் வனத்துறையே நிபுணத்துவம் பெற்றவர்கள் எனக்கூறி வழக்கை முடித்து…

அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், யானையை எங்கே விட வேண்டும் என்பதில் வனத்துறையே நிபுணத்துவம் பெற்றவர்கள் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது. 

தேனி மாவட்டம் கம்பத்தில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்பாக அகத்தியர் மலை கோதையாறு பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

இதனை அடுத்து களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிகொம்பன் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பிறகு அரிக்கொம்மன் குறித்து வனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  “தேனி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட அரிக்கொம்மன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட மேல் கோதையாரில் உள்ள குட்டியார் அணைப்பகுதியில் விடப்பட்டது. அரிக்கொம்பன் யானையானது நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் எடுத்துக் கொள்கிறது என வனத்துறை தெரிவித்தது.

இந்நிலையில் அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் எனக்கோரி கேரளாவைச் சேர்ந்த ரெபெக்கா ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போதுமான உணவு, தண்ணீர் இல்லாமல் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் அரிக்கொம்பன் யானை சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது யானை நலமாக உள்ளது. நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என வனத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, யானையை எங்கு விட வேண்டும் என முடிவு செய்ய வனத் துறையினரே நிபுணத்துவம் பெற்றவர்கள் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது. அதோடு அரிக்கொம்பனை ரவுடி போல இழிவாக சித்தரித்து செய்திகள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்ததோடு, அந்த கோரிக்கையை தனி வழக்காக தாக்கல் செய்யலாம் எனவும் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.