தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-உடுமலை சாலை கொண்டரசன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இறைச்சிக்கடை நடத்தி வந்தவர் தமிழரசன் (39). இவர் நேற்று வழக்கம் போல் தனது கடையில் இறைச்சி வியாபாரத்தை கவனித்து வந்தார்.
அப்போது தளவாய்பட்டினத்தில் இருந்து தாராபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த கார் இருசக்கர வாகனத்தின் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் இறைச்சி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அக்கம்பக்கத்தினர்
விபத்துக்குள்ளானவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், காரை ஓட்டி வந்தவர் ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (42) என்பதும், இவர் தாராபுரத்தை நோக்கி காரில் வந்து கொண்டிருக்கும் போது கொண்டரசம்பாளையம் பகுதியில் சேர்ந்த அருணகிரி (55) என்பவர் ஓட்டி வந்த
இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் இறைச்சி
கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இவ்விபத்தில் சிக்கியவர்கள் இறைச்சிக் கடையின் உரிமையாளர் தமிழரசன்(39), கடையில் பணியாற்றி வந்தவர் மிதுன்பாலாஜி(17), இறைச்சி வாங்குவதற்காக கடையில் நின்று கொண்டிருந்தவர் பிரகாஷ்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிரகாஷ் தாராபுரம் அரசு மருத்துவமனை அழைத்து செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த தமிழரசன், மிதுன்பாலாஜி, அருணகிரி ,செல்வராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த சி.சி.டிவி காட்சிகளை வைத்து போலீஸார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ம. ஸ்ரீ மரகதம்







