ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பரிந்துரைகள் வழங்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அறிவிக்கப்பட்ட குழுவில் இடம்பெற காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 5 அமர்வுகளாக இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த சிறப்பு கூட்டத் தொடர் என அரசியல் கட்சிகள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகிய அடுத்த நாளே “ஒரே நாடு, ஒரே தேர்தல் “ தொடர்பாக ஆய்வு செய்ய குழுவை அமைத்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் செளத்ரி, முன்னாள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதித்துறை அமைச்சர் என்.கே. சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோர் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இக்குழுவில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் இடம்பெற ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்.







