நாளை நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆலோசனை கூட்டம் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு கடந்த ஆகஸ்டு 20ம் தேதி மதுரையில் நடைபெற்றது. அதிமுக 50 ஆண்டுகளை நிறைவு செய்து 51ஆவது ஆண்டில் பயணிக்கும் வேளையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. மேலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் மாநாடு இதுவாகும்.
இந்த மாநாடு நிறைவடைந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 4ம்தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், அதிமுக எம்பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை நடைபெறுவதாக இருந்த கூட்டம் 10ம் தேதி நடைபெறும் எனவும், அக்கூட்டத்தில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.







