கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 2 லட்சம் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்றும், திமுகவின் ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் தடாகோவில் பகுதியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முதற்கட்டமாக கரூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 20,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விநியோகம் செய்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இலவச மின்சார விநியோகத்திற்கான ஆணைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூர், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ், சாமிநாதன், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”இன்று இலவச மின்சாரம் வழங்குவதால் எனது மனம் குளுமையாக இருக்கிறது. குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த விழா பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டியது. இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படி வழங்கியதில்லை. நாங்கள் சொன்னால் அதனை நிச்சயம் செய்வோம். இந்த சாதனையைச் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டுகிறேன்.
இந்த திட்டத்தை துவக்கி வைத்த 6 மாதத்தில் 1 லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆட்சி இருந்தது. ஆனால் அவர்கள் கொடுத்தது 2 லட்சம் மின் இணைப்பு மட்டுமே. ஆனால் நாங்கள் ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.
எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறோம். தனி நபர் வருமானம் அதிகரித்து உள்ளது. காற்றாலை உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 2030ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி 60 ஆயிரம் மெகா வாட் உற்பத்தி திறன் பெறும். விரைவில் தமிழகம் மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடம் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் 1 லட்சம் மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று 50,000 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. நானும் ஒரு விவசாயி என்று வார்த்தையில் பேசினால் மட்டும் போதுமா? உண்மையான விவசாயி முதல்வர் தான்” என்றார்.







