தென் இந்தியாவில் முதன்முறையாக சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று பெங்களூரு வந்த பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சாலை மார்க்கமாக பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி தென் இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து அனுப்பி வைத்தார். சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை நான்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்த ரயில் சேவையானது பெங்களூரு வழியாக சென்னை-மைசூரு இடையே புதன்கிழமையை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் காட்பாடி வழியாக பெங்களூர் சென்று மைசூரு சென்றடையும். இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரில் மட்டுமே நிற்கும். இந்த ரயில் பயணத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.







