ஓணம் பண்டிகை-கேரள மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி, கேரள மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்தும், அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழ்வதுமான ஓணம் பண்டிகையை ஒவ்வொரு…

ஓணம் பண்டிகையையொட்டி, கேரள மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்தும், அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழ்வதுமான ஓணம் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று வெகு விமரிசையாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட வாமன அவதாரம் தரித்த திருமால், தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் கேட்டு, ஓர் அடியை வானத்திலும் இரண்டாம் அடியை பூமியிலும் மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள் புரிந்தார்.

அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

பிறர் வாழ நாம் வாழ்வது, ஆணவத்தை அடக்குவது, தர்மம் காப்பது, பக்தியே முக்தி என்பதை உணர்த்துவது ஆகியவைதான் ஓணம் திருநாள் நமக்கு உணர்த்தும் அறிவுரைகளாகும்.

திருவோணப் பண்டிகையின்போது, 10 நாட்களுக்கு மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கோலமிட்டு, வண்ணப் பூக்களால் அலங்கரித்து, அதன் நடுவே குத்துவிளக்கேற்றி ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வதோடு, உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும் இன்புறுவார்கள்.

திருவோணத் திருநாளான இந்நன்னாளில், ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி, அன்பு, அமைதி, சகோதரத்துவம், பெருகி, மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும் என்ற என் விருப்பத்தினைத் தெரிவித்து, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.