ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலும், தமிழ்நாட்டில் வாழும் கேரள மக்களும் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான திருவிழாவாக ஓணம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி இந்த பூவுலகுக்கு வருவதாக நம்பிக்கை. நாம் நலமாக இல்லை என்றால் கூட மாமன்னரின் வருகை மக்களுக்கு நன்மைகளை வழங்கும் என்ற நம்பிக்கை கொண்ட மக்கள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அத்தப்பூ கோலமிட்டு, அழகான தோரணங்கள் கட்டி, நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க நாம் தயாராவது போல மகாபலியை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் அழகுபடுத்துகின்றனர். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையைப் போன்று, கேரளாவின் அறுவடைத் திருநாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையும் படியுங்கள் : சாலையோர உணவகங்களுக்கு ரேட்டிங் – போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!!
இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், சென்னையிலும் நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை (29.08.2023) சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இதனை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 2-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







