’தளபதி 68’ படத்திற்காக படக்குழு அமெரிக்காவில் நவீன டெக்னாலஜி மூலம் சிறப்பு விஎப்எக்ஸ் காட்சி எடுக்க இருப்பதாகவும், இதற்காக அதிக செலவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். யுவன் கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருந்தார். சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.பொதுவாகவே வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே சற்று வித்யாசமாகவே இருக்கும். சென்னை 28 படத்தில் துவங்கி தன் ஒவ்வொரு படங்களிலும் ஏதேனும் வித்யாசமான விஷயங்களை வெங்கட் பிரபு முயற்சித்து வருகிறார். அந்த வகையில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் இப்படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகர் விஜய்யுடன் நடிகை ஜோதிகா ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் அண்மையில் வெளியானது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடிக்க ஜோதிகாவிடம் கால்சீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2000இல் குஷி, 2003இல் திருமலை ஆகிய வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுக்க நடிகர் விஜய்யும் வெங்கட் பிரபுவும் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் விஜய்யின் உடலை ஸ்கேனிங் செய்வதாகவும், இதன் மூலம் ‘3டி விஎஃப்எக்ஸ்’ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யை இளமையாகவோ வயதானவராகவோ காண்பிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இதில் விஜய்-யை எப்படி காண்பிக்க இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
நவீன டெக்னாலஜி மூலம் உருவாக இருக்கும் இந்த சிறப்பு விஎப்எக்ஸ் காட்சிக்காக அதிக செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் ஷாருக்கான் ‘ஃபேன்’ படத்துக்காகவும் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காகவும் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனத்தில் 3 நாட்கள் ஸ்கேனிங் பணிகள் நடக்கின்றன. அதை முடித்துக்கொண்டு இந்த வாரம் சென்னை திரும்புகின்றனர்.







