பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மேலூர் ஆட்டுச்சந்தை வியாபாரிகளால் நிரம்பி வழிந்தது. ரூ 3 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் வாரம் தோறும்
திங்கள்கிழமை ஆடு மற்றும் கோழிகள் சந்தை நடைபெறுவது வழக்கம், சுற்று வட்டார
கிராமப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இதனை கொள்முதல் செய்வதற்காக திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், நத்தம், சிங்கம்புணரி ,சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் வாடிக்கையாக வருவதுண்டு.
இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அதிகமான வியாபாரிகள் சந்தையில் குவியத் தொடங்கினர், அதேபோல் மேலவளவு கச்சிராயன்பட்டி நாவினிப்பட்டி, தும்பைபட்டி திருவாதவூர் எட்டிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகளும் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்,
பக்ரீத் பண்டிகையையோட்டி 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூபாய் 8,000 லிருந்து 10,000 ரூபாய் வரை விலை போனது, இந்த சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
போளூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய ஆடுகள் சந்தை என்றால் போளூர் ஆட்டுச் சந்தை தான் பெயர் பெற்றது. இந்த போளூர் ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று விடியற்காலை முதல் போளூர், ஆரணி ,சேத்துப்பட்டு கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் வனப்பகுதி மற்றும் கிராமங்களில் இருந்து ஏராளமான வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தன.
ஆடுகளை வாங்குவதற்காக திருவண்ணாமலை,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,
சேலம் ,ஈரோடு, திண்டுக்கல் ,தேனி மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில்
இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும்
ஏராளமான வியாபாரிகளும், இஸ்லாமியர்களும் குவிந்தனர்.
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்ததால் ரூபாய் 2 கோடி வரை போளூர் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனையாகின. இன்று போளூர் ஆட்டுச் சந்தையில் ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூபாய் 8000 முதல் அதிகபட்சம் ரூபாய் 27 ஆயிரம் வரை விற்பனையானது.








