நாட்டிலேயே முதல் முறையாக வாடகை தாய் முறையில் கிடாரி கன்று ஈன்ற ஓங்கோல் பசு !

வாடகை தாய் போன்ற முறையில் சாகிவால் இனத்தை சேர்ந்த கிடாரி கன்றை நாட்டிலேயே முதல் முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த ஓங்கோல் பசு ஈன்றெடுத்துள்ளது. நாட்டுப் பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய மாநில…

வாடகை தாய் போன்ற முறையில் சாகிவால் இனத்தை சேர்ந்த கிடாரி கன்றை நாட்டிலேயே முதல் முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த ஓங்கோல் பசு ஈன்றெடுத்துள்ளது.

நாட்டுப் பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய மாநில அரசுகளின் இந்த முயற்சிக்கு உறுதுணை அளிக்கும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன்னுடைய கோசாலையில் வளர்க்கப்படும் பசுக்களில் நாட்டு பசுக்களின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்க தேவையான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. இது தவிர திருப்பதி மலையில் ஏழுமலையானுக்கு நைவேத்திய பிரசாதம் தயார் செய்ய நாட்டு பசுக்கள் மூலம் பெறப்படும் பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவை அதிக அளவில் தேவை உள்ளது. எனவே இந்த விஷயத்தில் தேவஸ்தான நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் திருப்பதியில் உள்ள கோசாலையில் செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் ஓங்கோல் பசு ஒன்று வாடகைத்தாய் போன்ற முறையில் சாகிவால் நாட்டு இனத்தை சேர்ந்த கிடாரி கன்று ஒன்றை பிரசவித்துள்ளது என்று கூறினார். மேலும் வாடகை தாய் போன்ற முறையில் அதிக பால் உற்பத்தியை கொடுக்கும் கிடாரி கன்றுகளை உற்பத்தி செய்யும் தீவிர முயற்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக வட மாநிலங்களில் இருந்து அதிக பால் உற்பத்தி கொடுக்கும் நாட்டு பசுக்கள் பலவற்றை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிக பால் உற்பத்தி கொடுக்கும் உயர்ரக நாட்டு பசுக்களை வாடகை தாய் போன்ற முறையில் கலப்பினங்களாக உற்பத்தி செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜகவர் ரெட்டி ஆலோசனையின் பேரில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. தொடர்ந்து வட மாநிலங்களில் உள்ள உயரக நாட்டு பசுக்களின் கருமுட்டைகளை சேகரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வேறு வகையான உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன. அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயர்ரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி தேவஸ்தான கோசாலையில் வளர்த்து வருகின்றனர். இது போல் பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் தற்போது தேவஸ்தான கோசாலையில் கர்ப்பமாக உள்ள நிலையில் அவற்றில் ஓங்கோல் பசு ஒன்று சாகிவால் இனத்தை சேர்ந்த உயர் ரக கிடாரி கன்று ஒன்றை ஈன்றுள்ளது. முதன் முறையாக ஓங்கோல் பசு ஈன்ற கன்றுக்கு பத்மாவதி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த முறையில் காளை கன்றுகளை தவிர்த்து கிடாரி கன்றுகளை மட்டுமே பிரசவிக்க செய்ய முடியும். திருப்பதி மலையில் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தூப, தீப, நெய்வேத்திய சமர்ப்பணங்களுக்கு தேவையான நாட்டு பசுக்கள் மூல பெறப்பட்ட பால், தயிர், வெண்ணெய்,நெய் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு 500 நாட்டு பசுக்கள் தேவை உள்ளது. இப்போது உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசுக்கள் தேவஸ்தான கோசாலையில் உள்ளன. மேலும் 300 உயரக நாட்டு பசுக்களை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க நன்கொடையாளர்கள் தயாராக உள்ளனர். தேவஸ்தானத்தின் கோசாலையில் தினமும் 4000 லிட்டர் பால் உற்பத்தி செய்யவும், 60 கிலோ உயர்ரக நாட்டு பசு வெண்ணை தயார் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இயற்கை விவசாயத்தை ஊக்கிவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு தேவஸ்தானம் இலவசமாக பசுக்களை வழங்கி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர்ரக சாகிவால் கிடாரி கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 10 பசுக்கள் சாகிவால் இனத்தைச் சேர்ந்த கிடாரி கன்றுகளை ஈன்றெடுக்க உள்ளன என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.