நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தினர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடிகர் விஜய் 49-வது பிறந்தநாள் விழாவை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று பிறந்த 5 குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கினர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
தஞ்சை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்தத் தலைவர் ஏனாதி மதன் தலைமையில் விஜய் ரசிகர்கள் காலைபட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கேக் வெட்டிபிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள், இன்று ஒரு நாள் மட்டும் நகரப் பகுதி முழுவதும் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் இலவச சேவையை தொடங்கி வைத்தனர். மேலும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு 60க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர்.
மயிலாடுதுறையில் உள்ள விஜயா திரையரங்கில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்பட பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இதனை அடுத்து திரைப்படம் பார்க்க வந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கினர். மேலும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மாவட்ட இளைஞரணி ஏற்பாட்டில் இன்று பிறந்த குழந்தைகள் 20க்கும் மேற்பட்டோருக்கு அரை கிராம் தங்க மோதிரத்தை விஜய் ரசிகர்கள் வழங்கினர். தொடர்ந்து 500 நபர்களுக்கு விஜய் ரசிகர்கள் உணவளித்தனர்.
தேனி பழைய பேருந்து நிலையத்தில் விஜய் ரசிகர்கள் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர். பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சிக்கன் பிரியாணி வாங்கிச் சென்றனர்.
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ஓவிய பட்டதாரி அறிவழகி என்பவர்
தனது வீட்டில் 8 அடி உயரத்தில், 8 அடி அகலத்தில் விஜய்யின் உருவத்தை ரங்கோலியாக வரைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அறிவழகியின் இந்த ரங்கோலி ஓவியத்தை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் பார்வையிட்டுனர்.
மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 49 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ.220-க்கு பெட்ரோல் மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கினார்கள், உணவு டெலிவரி பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வரும் ஊழியர்கள், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் பிரியாணி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.












