ஜிகா வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிகா வைரஸ் என்பது டெங்குவின் ஒரு வகையான வைரஸ் என சுகாதாரத்துறையினர் கூறுவதாக தெரிவித்தார்.
தற்போது அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், ஜிகா வைரஸ் தொடர்பான ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஜிகா வைரசை பரப்பும் கொசு, நல்ல தண்ணீரில் உருவாகும் என்பதால், வீடுகளை சுற்றி நீர் தேங்காத வண்ணம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.




