’ஒமிக்ரான் வைரஸ் – மக்கள் அச்சப்பட தேவையில்லை’

ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது என்றாலும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து தற்போது ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு…

ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது என்றாலும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து தற்போது ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளிடமிருந்து ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நபரும் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற நபர்களும் நல்ல முறையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், வெளிநாடுகளில் மூன்றாவது இலவச கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் உள்ள நிலையில், இந்தியாவில் முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்னமும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தார். அதே போல் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தற்போதுள்ள கொரோனா நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் இல்லை என்றும் அவர் கூறினார்.  இந்நிலையில், தமிழ்நாட்டில், கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.