புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி செலுத்தச் சென்ற செவிலியர்களை, மூதாட்டி ஒருவர் சாமியாடி, தடுப்பூசி வேண்டாம் என விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று உலகையே அச்சுருத்தி வரும் நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கொரோனா தடுப்பூசிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அரசாங்கங்களும் தடுப்பூசிகளின் அவசியத்தைப்பற்றி தொலைக்காட்சி மூலமாகவும் பேரணிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்னும் சில மக்களிடையே தடுப்பூசி மீதான அச்சம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பல இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் ஒரு முதிய தம்பதியின் வீட்டுக்கு தடுப்பூசி செலுத்தச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தடுப்பூசி வேண்டாம் என மறுத்துள்ளனர். அப்போது, தடுப்பூசியால் எதுவும் ஆகாது என சுகாதாரத்துறை ஊழியர்கள் கூறியபோதும் அதனை அவர்கள் ஏற்க மறுத்ததுடன் மூதாட்டி திடீரென சாமியாடத் தொடங்கினார். மேலும், மாரியம்மன், அங்காளத்தம்மனுக்கு தடுப்பூசி ஆகாது என்று கத்தியுள்ளார். இதையடுத்து, செவிலியர்கள் அங்கிருந்து உடனே சென்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.








