உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் 4 ஆயிரத்து 400 லிட்டர் தரமற்ற எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் மொத்த விற்பனை கடையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் சதிஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை செய்தனர். தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு அதிரடி சோதனை செய்தனர். அப்போது கடையின் உள்ள சோதனை செய்த போது அங்கு பூமிக்கடியில் சம்ப்பு கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெயை சேமித்து விற்பனை செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கடையின் உள்ளே இருந்த சம்ப்பில் தரமற்ற நிலையில் எண்ணெய் பாதுகாத்து வைத்திருந்தது அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்தது. இதனையடுத்து தற்காலிகமாக கடைக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதிஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,” அந்த கடையில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சோதனைக்கு சென்றபோது ஒரே சம்பில் சன் பிளவர் மற்றும் பாமாயிலை அவர்கள் கலந்து வைத்து விற்பனை செய்து உள்ளனர். பிறகு அங்கிருந்து சன் பிளவர் ஆயில் 1,000 லிட்டர் 3,400 பாமாயில் என மொத்தம் 4,400 கெட்டுப்போன எண்ணெயை பறிமுதல் செய்து உள்ளோம்” என்று கூறினார். மேலும் அந்த கடை உரிமையாளர் முறையான லைசன்ஸ் இல்லாமல் கடையை நடத்தி வந்துள்ளதாகவும் ரிடைலர்கள் இது போன்று தவறை செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







