முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என மாமல்லபுரத்தை சேர்ந்த நரிக்குறவர் இனப்பெண் அஸ்வினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்கிற நரிக்குறவர் இன பெண் வீடியோ வெளியிட்டு இருந்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரல் ஆனதை தொடர்ந்து, கடந்த வருடம் தீபாவளி அன்று தமிழக முதலமைச்சர் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், வீடு கட்டி தருவதாகவும், மாமல்லபுரத்தில் கடை ஒதுக்கி தருவதாகவும் கூறியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்தில் நியூஸ் 7 தமிழ் நிருபர் அப்பகுதிக்கு சென்று அஸ்வினியை சந்தித்தார். அப்போது இது குறித்து பேசிய அஸ்வினி, “நாங்கள் 50 வருடங்களுக்கு மேலாக மாமல்லபுரத்தில் வசித்து வருகிறோம். இங்கு உள்ள நரிக்குறவ இனத்தை சேர்ந்த நாங்கள் ஊசி பாசி வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கென ஒரு கடை கூட கிடையாது. கடை கேட்டால் உனக்கெல்லாம் கடை கொடுக்க முடியாது என ஏளனமாக பேசுகிறார்கள்” என்றார்.
மேலும், “ வங்கியில் லோன் கேட்டால் லோன் கொடுப்பது கிடையாது. கழிவறை கட்டி தருவதாக சொன்னார்கள். அந்த கழிவறை கட்ட கொண்டுவரப்பட்ட செங்கலை கூட எடுத்து சென்று விட்டார்கள்” என ஆதங்கத்துடன் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் உடனடியாக தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.