ஒரு கட்சியின் பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைமைப்பொறுப்பில் உள்ளவரே வெளிநடப்பு செய்த அதிசயத்தை தமிழ்நாடு கடந்த ஜூன் 23ந்தேதி கண்டது. அன்று அந்த அவமதிப்பைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2 எம்.எல்.ஏகளின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு 62 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொண்ட இபிஎஸ் அணியினருடன் சட்டப்போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் அதிமுகவில் தமது தலைமைப் பதவியை உறுதிப்படுத்தியுள்ளார். இப்படி தாம் ஒரு அரசியல் அதிசயம் என தமிழக அரசியலில் ஓ.பன்னீர் செல்வம் நிரூபித்த தருணங்கள் பல.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கிராமத்தில் பிறந்த ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். 1972ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தபோது அதில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் தமது அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக அடைந்த பதவி பெரியகுளம் நகர 18வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதி.1977ம் ஆண்டு இந்த பதவி அவருக்கு கிடைத்தது. ”இப்போது எவ்வளவு உயரத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதன் முதலில் இருந்த பதவியை பாருங்கள்” என ஜெயலலிதாவே அந்த பதவியை இரு முறை மேடையில் வாசித்து காண்பித்து, அரசியலில் ஓபிஎஸ் வளர்ச்சி எத்தகையது என ஆச்சர்யத்தோடு சுட்டிக்காட்டியிருக்கிறார். 1984ம் ஆண்டு பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் பதவி கிடைத்தது. தனது 33வது வயதில் அந்த பதவியை அடைந்த ஓ.பன்னீர்செல்வம் பிற்காலத்தில் இது போன்று மாநிலம் எங்கும் நியமனங்களை மேற்கொள்ளும் அதிமுகவின் தலைமை பீடத்தை அலங்கரிப்போம் என சிறிதும் எண்ணியிருக்கமாட்டார்.
1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் இணைந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு பின்னர் அதிமுக ஒன்றிணைந்தபோது, அக்கட்சியின் பெரியகுளம் நகரக்கழகச் செயலாளர் பதவி 1993ம் ஆண்டு வழங்கப்பட்டது. 1996ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம், பெரியகுளம் நகரசபை தலைவர் பதவியை அடைந்தார். நகரசபை தலைவர் பதவி to முதலமைச்சர் என்கிற அரசியல் அதிசயம் அடுத்த 5 ஆண்டுகளில் நிகழப்போகிறது என அப்போது யாரும் எண்ணியிருக்கமாட்டார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தால் அந்த அதிசயமும் நிகழ்ந்தது.
2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வென்று முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தபோதே அமைச்சராகி முக்கியமான இலாகாவான வருவாய்த்துறையை பெற்றார். ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறையாக பதவியேற்றார். டான்சி நில வழக்கில் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்தபோது தமக்கு பதில் முதலமைச்சர் பதவிக்கு சுட்டிக்காட்ட அவரது அமைச்சரவையில் பொன்னயைன், தம்பித்துரை என மூத்த அமைச்சர்கள் பலர் இருந்தனர். ஆனால் அப்போதுதான் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ள ஓ.பன்னீர் செல்வத்தை சுட்டிக்காட்டினார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு அவரது நம்பிக்கையை பெற்றார் ஓ.பன்னீர்செல்வம். அந்த நம்பிக்கை எத்தகையது என பின்னர் ஜெயலலிதா வாயாலேயே ஒரு மேடையில் விவரிக்கப்பட்டது. ராமர் வனவாசம் சென்றபோது அவருக்கு பதிலாக அரியாசனத்தில் அமர பரதனுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த அரியாசனத்தில் தாம் அமருவதற்கு பதில் ராமரின் பாத ரட்சயை வைத்து ஆட்சி செய்துவந்தார். பின்னர் ராமர் திரும்பி வந்ததும் அவரது கிரீடத்தை அவரிடமே கொடுத்தார். ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சம்பவத்தை வரலாற்றில் நிகழ்த்திக் காட்டியவர் ஓ.பன்னீர் செல்வம் என புகழ்ந்துள்ளார் ஜெயலலிதா.
கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தபோதும், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் அரியணை ஏறினார். ஆனால் அதே ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவரது நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் விமர்சிக்கப்பட்டார். 1973ம் அதிமுகவில் உறுப்பினரானது முதல் ஜெயலலிதா மரணத்திற்கு முன்பு உள்ள காலம் வரை ஓ.பன்னீர்செல்வத்தின் முதல் அத்யாயமாக கருதலாம். இந்த முதல் அத்யாயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அடைந்த முன்னேற்றங்கள் தற்செயலானதாக அல்லது அதிர்ஷ்டம் கைகூடி வந்தால் ஏற்பட்ட முன்னேற்றங்களாகக் கூட விமர்சிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
ஆனால் ஜெயலலிதா மரணத்திற்கு பிந்தைய ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கையின் இரண்டாவது அத்யாயம் அவ்வளவு எளிதானது அல்ல. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா கூறியதுபோல், பல்வேறு தர்மசங்கடங்களையும், அவமதிப்புகளையும் தனது பொறுமையாலும், தன்னம்பிக்கையாலும் வென்று தாம் ஒரு அரசியல் அதிசயம் என நிரூபித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணத்திற்கு பின் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்ற ஓபிஎஸ், 2017ம் ஆண்டு பிப்ரவரி 7ந்தேதி ஜெயலலிதா சமாதிமுன்பு நடத்திய 40 நிமிட தியானம் தமிழ்நாட்டையே சென்னை மெரினாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. அந்த 40 நிமிடமும் அவர் என்னமோ மவுனமாகத்தான் இருந்தார், ஆனால் தமிழ்நாடு முழுவதும் சலசலத்தது. ஓபிஎஸ் மேற்கொண்ட இந்த தியானத்திற்கு காரணம் என்ன என ஊடகங்களில் விவாதங்கள் பரபரத்தன. தியானம் முடிந்து அவர் பேசத் தொடங்கியதும் தமிழகம் ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போனது.
ஓபிஎஸ்சின் தர்மயுத்த தொடங்கிய அந்த தருணம் தமிழகம் கண்ட இன்னொரு அரசியல் அதிசயம். அப்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலா தரப்பினர் தம்மை கட்டாயப்படுத்தி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தாக கூறியதில் தொடங்கி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்ததை ஓபிஎஸ் என்கிற பூவுக்குள் ஏற்பட்ட பூகம்பமாக பார்த்து தமிழகம் வியந்தது. இதையடுத்து ஓபிஎஸ் அணியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோர் அணிவகுப்பார்கள் என்கிற பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் அவரது அணியில் திரண்டது என்னவோ 11 எம்.எல்.ஏக்கள்தான். எனினும் மனம் தளராமல் தொடர்ந்து தனது தர்மயுத்தத்தை நடத்தினார். ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆதரவாளர்களை திரட்டி தனது பலத்தை நிரூபித்த ஓபிஎஸ், இரட்டை இலையை மீட்பதற்காக சட்டப்போராட்டத்தையும் மேற்கொண்டார். பின்னர் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராக தோன்றிய கலகம் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. எடப்பாடி பழனிசாமியுடன், கைகோர்த்து இரட்டை தலைமை என்கிற புதிய சகாப்தத்தை அதிமுகவில் ஏற்படுத்தினார் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் என இருவரும் அதிகாரங்களை பகிர்ந்துகொண்டனர். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பதுபோல் ஓபிஎஸ்,இபிஎஸ் தரப்பிற்கிடையே பனிப்போர் தொடர்ந்தது. 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஆனது தொடங்கி, வேட்பாளர் தேர்வு வரை பல்வேறு விஷயங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருந்தது. இதனால் ஏற்பட்ட தர்மசங்கடங்களை பொறுமையாக கடந்தார் ஓபிஎஸ். தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. இதிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்றார். அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும், ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் ஆனார்கள்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் இருவருக்கும் இடையேயான மனக் கசப்பு அதிகரிக்கத்துவிட்டதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்துவதுபோல் இருவரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டனர். இரட்டை தலைமையை ஒழித்துவிட்டு கட்சியில் மீண்டும் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பகிரங்கமாக குரல் கொடுக்கத்த தொடங்கினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் பகிரங்கமாக வெடித்தது.
பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்த நிலையில் ஓபிஎஸ் கடும் நெருக்கடிக்கு உள்ளானார். ஜூன் 23ந்தேதி சென்னை வானகரத்தில் கூடிய அதிமுக பொதுக்குழுவில் அரங்கேறிய சம்பவங்களை பார்த்தவர்களுக்கு இனி ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்றே எண்ண தோன்றியிருக்கும். ஒன்று அதிமுகவில் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மாற்றுக் கட்சியில் இணைய வேண்டும் என்கிற இரண்டு வாய்ப்புகள்தான் ஓ.பன்னீர்செல்வம் முன்பு இருப்பதாக அதிமுகவை சுற்றி நிகழ்ந்த சம்பவம் காண்பித்தன. ஆனால் தளராத மனம், தன்னம்பிக்கையான அணுகுமுறை மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தான் ஒரு ஓயாத ஓபிஎஸ் என நிரூபித்தார். ஜூன்23ந்தேதி பொதுக்குழு முதல் பல நெருக்கடிகளுக்கிடையே அதிமுகவில் தனது அடையாளத்தையும் அந்தஸ்தையும் தக்கவைக்க ஓ.பன்னீர்செல்வம் என்னென்ன செய்தார் என பார்ப்போம்.
1) ஜூன் 23ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஏற்பட்ட நிகழ்வுகளால் மனம் தளராத ஓபிஎஸ் அன்று இரவே டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக களமிறங்கியிருந்த திரௌபதி முர்முவைக் சந்தித்து அதிமுக சார்பில் அவருக்கு ஆதரவைத் தெரிவித்தார். இதன் மூலம் அதிமுக ஒருகிணைப்பாளர் என்கிற முறையில் டெல்லியில் தனது அடையாளத்தை நிலை நாட்ட ஓபிஎஸ் முயன்றதாகக் கூறப்பட்டது.
2)ஜூன் 23ந்தேதி அதிமுக பொதுக் குழுவில் நிகழ்ந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது புகார் அளித்தார்.
3) ஜூன் 23ந்தேதிக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில் அந்த பதவிகள் இன்னும் காலாவதியாகவில்லை என்பதை உணர்த்துவதுபோல் எடப்பாடி பழனிசாமிக்கே கடிதம் எழுதினார்.
4) ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை இபிஎஸ் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டபோது, அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதத்தை மறுத்து வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு, மொத்தமாக உள்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மட்டும் எப்படி காலியானதாக அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பியது.
5) ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்ட காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 9.15 மணிக்கு பொதுக்குழுவை கூட்டினார் இபிஎஸ். ஒரு பக்கம் பொதுக்குழு நிகழ்ச்சிகள் சென்னை வானகரத்தில் களைகட்டிக்கொண்டிருக்க அதே நேரம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்றார் ஓபிஎஸ்.
6) கலவரம் எதிரொலியாக அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்த நிலையில், அந்த சீலை அகற்றி அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக்கோரி அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரம் அதிமுக தலைமை அலுவலகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தனது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என உரிமை கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
7) ஜூலை 11ந்தேதி பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் மற்றும் நீக்கங்கள் செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார் ஓபிஎஸ். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம்தான் என அந்த முறையீட்டில் அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார்
8) முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் மக்களவையின் எம்.பியுமான ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர் செவ்வத்தின் மற்றொரு மகனான ஜெயபிரதீப் ஆகியோர் கடந்த 14ந்தேதி அதிமுகவிலிருந்து அக்கட்சியின் இடைக்காலப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டனர். அவர்கள் தவிர ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 16 பேரையும் அன்று கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அன்று இரவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற பெயரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியையையே கட்சியைவிட்டு நீக்நுகுவதாகக் கூறி அதிரடிகாட்டினார்.
9) திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக ஓபிஎஸ் மீது இபிஎஸ் அணியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மின் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
10) அதிமுகவின் பொருளாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டதை நிராகரித்த வங்கிகள், திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக வங்கி கணக்குகளை கையாளுவதை ஏற்றன. எனினும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
11) ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், இனி அவரை அதிமுகவின் உறுப்பினராக கருத வேண்டாம் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையின் இதனை மறுத்து மக்களவை சபாநாயகருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில், ரவீந்திரநாத் குறித்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
12) இவை அனைத்திற்கும் மேலாக ஜூலை11ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓ.பன்னீர் செல்வம், அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் மூலம் தமது தரப்பில் வலுவான வாதங்களை எடுத்துவைத்தார். இந்நிலையில் ஜூன்23தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடரும் என உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
பல்வேறு நெருக்கடிகளை கடந்து கட்சியில் தனக்கு இருந்த அதிகாரத்தை மீட்டெடுத்துள்ள ஓ.பன்னீர்செல்வம், இந்த வெற்றி வேகத்தில் ஆக்ரோஷமான வார்த்தைகளை உதிர்க்காமல் வழக்கம்போல் தனது நிதானமான, பொறுமையான, அரசியலை தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். இனி இரட்டை தலைமை கிடையாது கூட்டுத்தலைமை எனக் கூறி தம்முடன் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்புவிடுத்திருப்பது அவரது அரசியல் அணுகுமுறைக்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது. அரசியலில் ஏற்ற, இறக்கங்கள் பலவற்றை சந்தித்துள்ள ஓபிஎஸ், தாம் ஒரு அரசியல் அதிசயம், என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.










