ஒடிசா ரயில் விபத்தின் போது மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட வெங்கடேசனை பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 301 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன. விபத்து நடந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பி-7 ரயில் பெட்டியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 39 வயது நிறைந்த வீரர் வெங்கடேஷ் என்பவர் விடுப்பில் சென்னைக்கு பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்த மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டி தடம் புரண்டாலும் மற்ற பெட்டியுடன் மோதவில்லை.
இவர் விபத்து குறித்து தான் பணியாற்றும் கொல்கத்தா பட்டாலியன் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் என்டிஆர்எப் கட்டுப்பாட்டு அறைக்கும், விபத்து படங்கள் மற்றும் இருப்பிடம் பற்றிய விவரத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினார். இத்தகவல் அடிப்படையில் என்டிஆர்எப் முதல் குழு ரயில் விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய வீரர் வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன், ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார். உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.







