”உடல்களை அடையாளம் காணமுடியாமல் தவிக்கும் உறவினர்கள்” : ஒடிசாவிலிருந்து நியூஸ் 7 தமிழின் பிரத்யேக தகவல்கள்

”உடல்களை அடையாளம் காணமுடியாமல் உறவினர்கள் தவிக்கும் சோகமான நிலை குறித்து  ஒடிசாவிலிருந்து நியூஸ் 7 தமிழ் அளிக்கும் பிரத்யேக தகவல்களை தற்போது காணலாம். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

”உடல்களை அடையாளம் காணமுடியாமல் உறவினர்கள் தவிக்கும் சோகமான நிலை குறித்து  ஒடிசாவிலிருந்து நியூஸ் 7 தமிழ் அளிக்கும் பிரத்யேக தகவல்களை தற்போது காணலாம்.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி  மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது.  இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில்   301 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டாக் ரயில்வே காவல்துறையின் உதவி ஆய்வாளர் பப்பு குமார் நாயக் கொடுத்த  புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 337, 338, 304 A, 34 மற்றும் ரயில்வே சட்டம் 153, 154, 175 ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இன்னும் அடையாளம் காணப்படாமல் 101 உடல்கள் உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த ஒடிசாவிலிருந்து நியூஸ் 7 தமிழின் துணை ஆசிரியர் அன்சர் அலி விரிவான தகவல்களை அளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது..

“ ரயில் விபத்தில் உயிரிழந்துள்ள 100 க்கும் மேற்பட்ட உடல்கள் இன்னும் அடையாளம் காணப்பட முடியாத அவலமான நிலை உருவாகியுள்ளது. இறந்தவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் ஒட்டப்பட்டிருந்தாலும் அவர்களது முகங்கள் எளிதில் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை சார்ந்த இளைஞர் தனது குடும்பத்தினர் இருவரை தேடி கட்டாக் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் அவரது உறவினரின் அடையாளங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் முகங்களோடு ஒத்துப் போகவில்லை. எனவே தனது உறவினரின் கையில் பச்சை குத்தப்பட்டுள்ளதாகவும் அதனை வைத்து அடையாளம் காண புவனேஷ்வர் செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் மேற்கு வங்கத்திலிருந்து பயணம் செய்த பயணிகள்தான் இந்த விபத்தில் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.” என துணை ஆசிரியர் அன்சர் அலி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.