சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், எதனால் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மலர்விழி 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டு சென்னையில் வணிகவரித் துறையில் இணை ஆணையராக பணியாற்றினார். இதனையடுத்து விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த அவருக்கு ஐஏஎஸ் கேடர் வழங்கப்பட்டு, பின்னர் 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய மலர்விழி, 2015-17 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், 2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தருமபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த மலர்விழி தற்போது, சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ரூ.40 மதிப்புள்ள ரசீது புத்தகத்தை ரூ.135க்கு வாங்கியதாகவும், இதில் ரூ.1.32 கோடி முறைகேடு செய்ததாகவும் மலர்விழி உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள தாய்சா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்து பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தருமபுரி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய சென்னை அறிவியல் நகரின் துணை தலைவராக பணிபுரிந்து வரும் மலர்விழி, தருமபுரி மாவட்ட ஆட்சியராக 28.02.2018 -ந்தேதி முதல் 29.10.2020 ந்தேதி வரை பணிபுரிந்தபோது, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் ஐந்தாவது மாநில நிதி குழு மானிய நிதியிலிருந்து 20.11.2019ந்தேதி மற்றும் 28.04.2020-ந்தேதி சொத்துவரி வசூல் இரசீது புத்தங்கள், குடிநீர் கட்டணம் வசூல் இரசீது புத்தங்கள், தொழில்வரி வசூல் ரசீது புத்தங்கள் மற்றும் இதர கட்டண புத்தங்கள் என மொத்தம் 1,25,500 எண்ணிக்கையில் 2 தனியார் நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்து கிராம ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்துள்ளார்.
இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படாமல் நேரடியாக 2 தனியார் நிறுவனங்களிலிருந்து மேற்படி வரிவசூல் புத்தங்களை அதிகபட்ச விலைக்கு கொள்முதல் செய்ததில் மலர்விழி, 2 தனியார் நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து ரூ.1,31,77,500/- கையாடல் செய்தது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் 05.06.2023- அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, சென்னையில் உள்ள மலர்விழியின் வீடுகள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் சென்னையில் ஐந்து இடங்களிலும், விழுப்புரம் மற்றும் தருமபுரியில் தலா ஒரு இடங்களிலும் மற்றும் புதுக்கோட்டையில் மூன்று இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









