ஒடிசாவில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் தீவிர காயம் அடைந்த அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும், பிஜு ஜனதாதள கட்சியின் மூத்த தலைவராகவும் இருப்பவர் நபா கிஷோர் தாஸ் . இன்று அவர் ஜார்சுகுடா மாவட்டம் பிரஜாராஜ் நகர் பகுதியில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக காரில் சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைச்சர் நபா கிஷோர் தாஸ் காரைவிட்டு இறங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர், அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். நான்கு முறைக்கு மேல் அவர் துப்பாக்கியால் சுட்டதால் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சரிந்து கீழே விழுந்துள்ளார். இந்த நிகழ்வின் போது உள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீதும் கோபால் தாஸ் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பதற்றமடைந்த பொதுமக்களும் , காவல்துறையினரும் துப்பாக்கி குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அமைச்சர் உட்பட மூவரை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். நபா தாஸின் மார்பில் குண்டு பாய்ந்துள்ளதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஜார்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மேல் சிகிச்சைக்காக தலைநகரான புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் புவனேஷ்வர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆளும் அரசின் அமைச்சர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அமைச்சரின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து வருகிறார்.
– யாழன்