ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் – சி.வி.சண்முகம்

அதிமுகவிற்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சாடியுள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவில் ஜெயலலிதா அணி மற்றும்…

அதிமுகவிற்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சாடியுள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவில் ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணிகள் இடையேயான பிரச்சனையின் போது கூட அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட போதிலும், யாரும் கட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழையவில்லை என்றார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கியதும், அவர்கள் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

 

கட்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், விலை மதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனத்தில் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டதாகவும், கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக போலீசில் ஏற்கனவே புகாரளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு, இந்த நடவடிக்கையை திமுக அரசு செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இந்தியாவிலேயே எந்தக் கட்சியிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதில்லை என்றார்.

 

ஜெயலலிதா தன்னை முதல்வராக்கினார் என்று சொல்லிக்கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அறையை எட்டி உதைத்து, உள்ளே சென்று, அங்கு ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்து, அங்கிருந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். மேலும் இன்னமும் தன்னை அதிமுக தொண்டன் என்று சொல்லிக்கொள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதி இல்லை என்ற சி.வி.சண்முகம், ஜானகி அம்மையாருக்கு சொந்தமான இடம் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பின், அது கட்சி அலுவலகமாக செயல்பட்டு வருவதாகவும், அதிமுக அலுவலக இடத்தின் ஆவணங்கள், அதிமுகவுக்கு சொந்தமாக மதுரை, கோவையில் உள்ள சொத்துக்களின் ஆவணங்கள் என்று அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வம் திருடிச் சென்றதோடு வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

எனவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதாகவும், புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டு, CSR தந்திருப்பதாகவும், புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் பேசிய சி.வி.சண்முகம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை வங்கிகள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் விளக்கமளித்தார்.

 

அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா., சபைக்குக் கூட கடிதம் எழுதுவார் என்று சாடினார். கட்சியின் தலைமை அலுவலகம் அதிமுகவின் சொத்து தான் என்றும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவே இருந்தாலும், அதிமுக அலுவலகத்துக்கு அவர் பாதுகாவலர் மட்டுமே என்றும், அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் உரிமைகோர முடியாது என்றும் தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.