அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது:
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் 505 பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த ஐந்து மாதங்களில் அவர்கள் உறுதியாக எந்தவிதமான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர்க்கான தாலிக்கு தங்கம் மற்றும் பெண்களுக்கான ஸ்கூட்டி திட்டங்கள் தற்போது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் உள்ளது.
திமுகவினர் கொடுத்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மகளிருக்கான ஆயிரம் ரூபாய் பணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப் படவில்லை . அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர். தமிழகம் அமைதிப் பூங்காவாக, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டும் இருந்தது .
ஆனால் திமுக ஆட்சியில் கொலை ,கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திமுக அரசுக்கு இது பற்றி எந்தவிதமான கவலையும் இல்லை. இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் பேசினார் .







