ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் டெல்லி பயணம் குறித்து அண்ணாமலை கருத்து

அதிமுக – பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ஆம் ஆண்டு நினைவு…

அதிமுக – பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை திநகர் கமலாலயத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தமிழ்நாட்டுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர். விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர் என புகழாரம் சூட்டினார். இத்தகைய சிறப்புகளை பெற்ற அப்துல் கலாம் 2-ம் முறையாக குடியரசுத் தலைவர் ஆவதை சிலருடன் இணைந்து திமுகவும் தடுத்து விட்டதாக சாடினார்.

தமிழ்நாட்டில் சிலர் போலி சமூக நீதி பேசுகின்றனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை முன்னேற்றி இருக்கிறோம். ஆனால் திமுகவில் இதுபோல் இல்லை, அக்கட்சியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை வளரவிடுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

இஸ்லாமிய மக்களுக்கு அதிகமாக நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. எதிர்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு என்ற சர்ச்சை ஆதாரமில்லாதது; திட்டமிட்டு நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கி வருகிறது. அதிமுக – பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலைவர்கள் தலையீடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.