நாடு முழுவதும் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸை வீழ்த்தி, 1967ல் தமிழகத்தில் அரியணை ஏறியது அண்ணா தலைமையிலான திமுக. அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்தாலும், பெரியார் மீதிருந்த அன்பால், கட்சியில் தலைமை பொறுப்பை அவருக்காகவே விட்டு வைத்திருந்த அண்ணா, பொதுச்செயலாளராக இருந்து கட்சியை வழி நடத்தினார்.
முதலமைச்சராக பதவியேற்று முழுதாக 2 ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில் அண்ணாவின் இறப்பு தமிழக மக்களை உலுக்கியது. அவரின் மறைவுக்கு பின் தற்காலிக முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் பொறுப்பேற்றாலும், மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு யார் முதலமைச்சராக செயல்படுவது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்தது. அதே நேரத்தில், அண்ணா உருவாக்கிய திமுகவை, வழிநடத்தப் போவது யார் என்கிற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் தான், முதலமைச்சர் பதவியை அலங்கரிப்பதில் நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. கருணாநிதிக்கு பெரும்பான்மையான ஆதரவு இருப்பதை உணர்ந்த நெடுஞ்செழியன், முதலமைச்சர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டதால், 1969 பிப்ரவரி 10-ல் முதல் முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் கருணாநிதி.
கருணாநிதியால் முதல்வராகும் வாய்ப்பை இழந்த நாவலர் நெடுஞ்செழியன், கட்சித் தலைமை பதவியை பிடித்துவிட வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். அதன்படி, திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வந்த நெடுஞ்செழியன், மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார். முதல்வராக கருணாநிதியும், பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் இருந்தால், மோதல் ஏற்பட வழி வகுக்கும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கருதினார்.
கட்சித் தலைமை ஒருவரிடமும், ஆட்சித் தலைமை மற்றொருவரிடமும் இருந்தால், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வலிமையை இழந்தது போன்று, திமுகவும் ஆகிவிட கூடும் என்கிற கருத்தை முன்வைத்து பேசினார் எம்.ஜி.ஆர். இதனைத் தொடர்ந்து, திமுகவில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அதுவரை திமுகவில் இருந்த அவைத்தலைவர் பதவி கலைக்கப்பட்டு, பெரியாருக்காக காலியாக வைக்கப்பட்டிருந்த தலைவர் பொறுப்பை ஏற்றார் கருணாநிதி (1969 ஜூலை 27). நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சியில் முதல்வராகவும், கட்சியில் தலைவராகவும் கருணாநிதி வருவதற்கு பக்கபலமாக இருந்த எம்ஜிஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி.
அரசியலில் எண்ணற்ற ஏற்ற இறக்கங்களை சந்தித்த கருணாநிதி, 5 முறை தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவர் என்பதையும் தாண்டி, ஒரு மாநில கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் பதவி வகித்தவர் என்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் என்பது, அவரை தலைவராக கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.
கட்டுரையாளர் : மா.நிருபன் சக்கரவர்த்தி