விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ப்ரீதி படேல் அனுமதி அளித்துள்ளார்.
கடந்த 2010-ல் ஜீலியன் அசாஞ்சே ஆயிரக்கணக்கான அமெரிக்க ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டார். அதையடுத்து, உளவு சட்டத்தை மீறியது உட்பட 18 குற்றவியல் வழக்குகளில் அவர் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி, 2019-லிருந்து லண்டன் சிறையிலிருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அசாஞ்சேவிடம் விசாரணை நடத்த அவரை தங்கள் நாட்டுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா, வலியுறுத்தியதை அடுத்து அவரை நாடு கடத்த இங்கிலாந்து முடிவு செய்தது.
எனினும், இதை எதிர்த்து அசாஞ்சே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவரது வழக்கை விசாரித்த லண்டன் கீழமை நீதிமன்றம், அசாஞ்சேவை நாடு கடத்துவது குறித்த இறுதி முடிவை இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் ப்ரீதி படேல் எடுப்பார் என்று 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. மேலும், அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், அவர் 14 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான அனுமதியை ப்ரீதி படேல் வழங்கியுள்ளார். அவரை நாடுகடத்துவது அநீதியானது என்றோ முறைகேடானது என்றோ இங்கிலாந்து நீதிமன்றங்கள் கருதவில்ல என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மனித உரிமைக்கு எதிரானது என கூற முடியாது என்றும் அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டாலும் அங்கும் அவர் சரியான முறையில் நடத்தப்படுவார் என்றும் உள்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் ஒப்புலை எதிர்த்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அசாஞ்சேவின் மனைவி தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சரின் முடிவு கருத்துச் சுதந்திரத்திற்கும் இதழியலுக்கும் எதிரானது என அவர் தெரிவித்துள்ளார். அசாஞ்சேவின் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் ஏற்கப்படா விட்டால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அங்கும் ஏற்கப்படாவிட்டால் அவர் 28 நாட்களுக்குள் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.