நாதக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்கள் விலகல்!

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் விலகி வருகின்றனர். தொடர்ந்து நேற்று(பிப்.25) அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நாதக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், “மன வேதனையோடு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன். நாதக  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் நான் தோற்க போகிறேன் எனத் தெரிந்தும் தீவிரமாக தேர்தல் பணியாற்றினேன்.

அதேபோன்று 2021 சோளிங்கர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு பொருளாதாரம், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றேன். என்னைப்போல் பல வேட்பாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சீமான் சமீப காலமாக பெரியாரைப் பற்றி தவறாக பேசுகிறார். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.

பாஜகவின் சங் பரிவார் ஆதரவு நிலைப்பாடு எடுப்பது, அவர்களை பேரறிஞர்களாக கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல. தமிழ் தேசியத்தின் உண்மையான முகம் சீமான் இல்லை. ராணிப்பேட்டைக்கு சீமான் இன்று வருவதாக உள்ளது. அதனால் இன்றைய தினம் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.