திமுக அரசின் இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து இன்று 3-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா மற்றும் மு.கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021 மே 7 அன்று ஆட்சி பொறுப்பேற்று இதே இடத்தில் நான் கூறினேன். இந்த ஆட்சி ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் இல்லை. ஓட்டு போடாதவர்களுக்குமான ஆட்சி தான். இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையனும், ஓட்டு போடாதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லை என்று வருந்தப்பட வேண்டும் என்று. அப்படிதான் இன்று இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
விமர்சனங்களை பற்றி கவலைப்படமாட்டேன், நல்லவைகளை எடுத்துக்கொள்வேன், கெட்டவைகளை புறம் தள்ளுவேன். இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான். தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, கோபாலபுரம் இல்லம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் அவர் ஆசி பெற்றார்.
- பி.ஜேம்ஸ் லிசா