“சாதாரண இடைத்தேர்தல் அல்ல”….”நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையிலான போர்” – அமைச்சர் அருண்ராஜ்!

மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் தவெக என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டி வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் கடந்த 25-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கோள்கிறார்.

முதலமைச்சர் விஜயின் வருகையை ஒட்டி தாராபுரம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரம் நடைபெறும் திடலில் அனுமதி சீட்டு பெற்ற 5000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். கோவை சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் தாராபுரம் தொகுதியில் உள்ள மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டம் மேடைக்கு வந்தடைந்தார். கோவையில் இருந்து திருப்பூர் வந்த முதலமைச்சர் விஜய்க்கு சாலையில் நின்ற பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரசார பொதுக்கூட்ட இடத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் தவெக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் சேர்ந்த செம்மலையை த.வெ.க. துண்டு அணிந்து கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும், சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.-வில் இணைந்த தலைவர்கள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜய பாஸ்கர்களும் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், தமிழ்நாட்டின் தங்க மகன், தாய்மார்களின் செல்லமகன். ஒரு ரூபாய் கூட இல்லாமல் கூடும் கூட்டம் இது. கொளுத்தும் வெயிலில் கூடுகின்ற கூட்டம். இந்தியாவே உற்று நோக்கின்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் விஜய். திரும்பவும் தமிழக மக்களை ஏமாற்றி தொழில் செய்ய முடியுமா? இல்லை வெளிநாட்டில் ஏதாவது முதலீடு செய்துகொண்டு சென்றுவிடமாலா? என்று எதிர்க்கட்சிகள் ஜோசியம் பார்க்கத் தொடங்கிவிட்டனர். என்றுமே எதிர்க்கட்சி வரிசையில்தான் அவர்கள் (திமுக) இருக்க வேண்டும். தமிழக மக்கள் பகுத்தறிவோடு சிந்தித்து வாக்களித்துள்ளனர்.

திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கொங்கு மக்கள் எடப்பாடி பழனிசாமியிடம் சத்தியம் வாங்க வேண்டும். ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியது ஏன்? திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டதால் தானே. நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூற முடியுமா? கொங்கு மண்டலத்தின் 61 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்று தவெகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் மாறியுள்ளது. இதனைச் செய்துகாட்டிய மக்களுக்கு சல்யூட். இடைத்தேர்தலிலும் அதிமுக – திமுக கூட்டணி வைத்துள்ளது என்பதை சான்றுடனே கூறுகிறேன். மதுராந்தகம் தொகுதி திமுகவுக்கு, தாராபுரம் தொகுதி அதிமுகவுக்கு என அவர்கள் பங்குபோட்டுக்கொண்டனர்.

ஊழல் இல்லாத ஆட்சியை நம் முதல்வர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் தவெக. எஸ்.ஐ.ஆர்-ஐ பொறுத்தவரை அதனை எதிர்ப்பதுதான் தவெக நிலைப்பாடு. தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதே நம் இயக்கத்தின் நிலைப்பாடு. இது சாதாரண இடைத்தேர்தல் அல்ல. நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையிலான போர். இந்த தேர்தலில் தவெக வெற்றி பெறுவதன் மூலம் தாராபுரம் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.