தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டி வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் கடந்த 25-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கோள்கிறார்.
முதலமைச்சர் விஜயின் வருகையை ஒட்டி தாராபுரம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரம் நடைபெறும் திடலில் அனுமதி சீட்டு பெற்ற 5000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். கோவை சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் தாராபுரம் தொகுதியில் உள்ள மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டம் மேடைக்கு வந்தடைந்தார். கோவையில் இருந்து திருப்பூர் வந்த முதலமைச்சர் விஜய்க்கு சாலையில் நின்ற பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பிரசார பொதுக்கூட்ட இடத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் தவெக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் சேர்ந்த செம்மலையை த.வெ.க. துண்டு அணிந்து கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும், சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.-வில் இணைந்த தலைவர்கள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜய பாஸ்கர்களும் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் வரவேற்புரை வழங்கினார்..
தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “இந்த நாட்டின் விடிவெள்ளி விஜய் அவர்கள். உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் இதுபோன்ற ஆட்சியை வரவேற்று இருக்கிறார்கள். தாராபுரம் இனிமேல் விசிலின் கோட்டை என நிரூபித்து காட்டுகின்ற காலம்தான் வருகின்ற 6-ம் தேதி என்பதை மறந்து விடக்கூடாது.. ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அனைவருடைய வேண்டுகோள். 147 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டத்திற்கான ஆணையை வழங்கும் நாளாக இந்த நாள் திகழ்ந்திடும். இந்திய நாடே வியக்கத்தக்க வகையில் இரு தொகுதிகளின் தீர்ப்பு அமையும். என்று தெரிவித்துள்ளார்.




