இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடும் நார்வே..!

இலங்கையில் உள்ள நார்வே தூதரகத்தை மூட இருப்பதாக நார்வே நாடு அறிவித்துள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் நார்வே நாடு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலை அமைப்பான விடுதலைப் புலிகளுக்கும் இடையே…

இலங்கையில் உள்ள நார்வே தூதரகத்தை மூட இருப்பதாக நார்வே நாடு அறிவித்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் நார்வே நாடு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலை அமைப்பான விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் மூண்ட போது இலங்கை அரசு – விடுதலைப்புலிகள் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய நாடுகளில்  நார்வே முக்கியமான ஒன்று.

இலங்கையில் 1997ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை அமைதித் தூதுவராக செயல்பட்ட நார்வே, 2002ஆம்ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தியது.

எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி இலங்கையில் சமாதானத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்ட நாடு நார்வே என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. நார்வே தன் தூதரகத்தை இலங்கையிலிருந்து நிரந்தரமாக மூடுவது தொடர்பாக 2022 ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியாகியிருந்தது.

கொழும்பிலுள்ள தூதரகத்தை மூடும் முடிவின் மூலம் நார்வே – இலங்கை இடையிலான இருதரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தூதரகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலத்தீவுடனான நார்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு இந்தியாவிலுள்ள நார்வே தூதரகத்தை பின்தொடருமாறு நார்வே நாடு கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.