காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, கர்நாடக அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதன்படி நேற்று முன்தினம் விநாடிக்கு 18 ஆயிரத்து 52 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நீர்வரத்து குறைந்ததை அடுத்து, கர்நாடகா தமிழ்நாடு எல்லை பகுதியான பிலிகுண்டுலு பகுதியில் மதியம் 12 மணி நிலவரப்படி நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்தது.
தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 11 ஆயிரத்து 342 கனஅடியாக குறைந்தது. இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியிலிருந்து, 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.




