வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் மிக முக்கியமான மழைக்காலமாகும். இது ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டு மழைப்பொழிவில் சுமார் 48% முதல் 50% வரை இந்த பருவமழை மூலமே கிடைக்கிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், சம்பா சாகுபடி போன்ற முக்கிய விவசாயப் பணிகளுக்கும் இதுவே முதன்மை ஆதாரமாகும்.தற்போது பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாளை (செப்.21) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வழியாக பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பலவீனமான மின்கம்பங்களை சீரமைத்தல் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.




