“தவெக ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” – மு.க.ஸ்டாலின்!

தவெகவின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்திருப்பது சாதாரணம் அல்ல. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கம்பீரத்துடன் திமுக உள்ளது. திமுக பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே ஏற்பட்டு இருக்காது. நமக்கும் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 17 லட்சம் தான். நமது கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தான் தவெக ஆட்சி நடந்து வருகிறது. தவெக ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

மக்களுக்கு உதவாத இந்த உதவாக்கரை ஆட்சியில் என்ன நடக்கிறது? நான்கு மாதத்துக்கு முன்னாடி அரிசி பருப்பு, சர்க்கரை எல்லாம் என்ன விலை விற்றது? இன்னைக்கு என்ன விலையில் விற்கிறது. இந்த விலைவாசி உயர்வே இந்த ஆட்சியின் லட்சணத்தை சொல்வதற்கு போதும்.

மாண்பு இழந்த பேரவை நிகழ்வுகளை பார்க்கும் பொழுது கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை டைவர்ஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். எனது மிசா கைது பற்றிய யாருக்கும் நிரூபிக்க வேண்டியது இல்லை. எனது தியாகத்திற்கு மதிப்பெண் போடும் அருகதை இல்லை. கையில் வைத்த மை காய்வதற்கு முன்னமே ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள். ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தேர்தல் வந்துள்ளது. ஒரே நாளில் 8 கொலைகள் அரங்கேறியுள்ளன. தவெகவின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஜென் சி இளைஞர்களை கவர, அவர்களது மொழியிலேயே பேச வேண்டும். தமிழ்நாட்டைக் காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் என தெரிவித்தார்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.