முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமீறிவிட்டார் ! ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமீறல் செய்துவிட்டதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமீறல் செய்துவிட்டதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடிதம் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி காலமானதை தொடர்ந்து அவரது தொகுதியான ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், திமுக கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு ஆகியோர் உட்பட தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.

இதில் குறிப்பாக திமுக, அதிமுகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், இடைத்தேர்தலில் தங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என திமுகவினரும், தேர்தல் களத்தில் மட்டுமல்ல கட்சிக்குள்ளும் தனது தலைமையை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

இருப்பினும் மார்ச் 02-ஆம் தேதி வெளிவந்த தேர்தல் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்று 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமீறல் செய்துவிட்டதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட்டில் பெண்களுக்காக மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என பேசி இருந்ததாகவும், இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு ஏற்கனவே அவர் புகார் அளித்திருந்தும், ஆனால் அவர்கள் எந்த வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.