வடகொரியா ராணுவ விமானங்கள் எல்லை பகுதிகளில் பறந்ததையடுத்து, தென் கொரியாவும் தனது போர் விமானங்களால் அதனை விரட்டி சென்றது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா கடந்த 6-ம் தேதி ஜப்பான் வான்வெளிக்கு மேலே ஏவுகணை ஒன்றை செலுத்தியது. 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக வடகொரியா ஜப்பான் வான்வெளிக்கு மேலே இந்த ஏகவுகணையை செலுத்தியதாக அறிவித்தது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராக தன்னுடைய வலுவை வெளிப்படுத்த வட கொரியா ஏவுகணையை ஏவியதாக கூறப்பட்டது.
இதனிடையே, தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளை பிரிக்கும் எல்லைக்கு அருகே 10 வடகொரிய ராணுவ விமானங்கள் பறந்துள்ளன. ராணுவ எல்லைக் கோட்டிற்கு வடக்கே சுமார் 25 கி.மீ தொலைவிலும், வடக்கு எல்லை கோட்டிற்கு வடக்கே சுமார் 12 கி.மீ தொலைவிலும் இந்த விமானங்கள் பறந்துள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்த தென்கொரியா, தனது போர் விமானங்களை வைத்து அதனை விரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரிய எல்லையின் கிழக்குப் பகுதிக்கு அருகிலும் அந்த விமானங்கள் காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், தென் கொரிய விமானப்படை “F-35A உட்பட அதன் உயர்மட்ட விமானப் படையுடன் அவசரகால நடவடிக்கையை நடத்தியதாக செய்திகள் வெளிவருகின்றன.
-இரா.நம்பிராஜன்








