வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல்கள் முறையாக அப்புறப்படுத்தப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டம் மற்றும் வடசென்னை அனல் மின் திட்டம் நிலை -III ஆகிய திட்டங்கள் அமைக்கப்பட்டு வரும் பகுதிகளில் அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பின்னரே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டு மின் திட்டப்பணிகளும் ஒன்றிய மற்றும் மாநில அரசுத் துறைகள் விதித்துள்ள விதிகளின் படியும், தொடர் கண்காணிப்பின் கீழும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
வடசென்னை அனல் மின் திட்டம் நிலை -IIIயிலிருந்து வெளியேற கூடிய அனைத்து சாம்பல் கழிவுகளும் வாகனங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்படும். அவசர காலங்களின்போது இந்நிலையத்திலிருந்து சாம்பல் கழிவுகளை கரைத்து, பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலமாக சாம்பல் குளத்திற்கு அனுப்பப்படும்.” என தெரிவித்துள்ளார்.







