மீண்டும் களமிறங்கும் நோக்கியா போன்கள்! விலை தெரியுமா?

கைப்பேசி தயாரிப்பில் பெயர் பெற்ற நிறுவனமான நோக்கியா, தற்போது யுபிஐ வசதியுடன் நோக்கியா 105 மற்றும் 106 4ஜி என்ற புதிய மாடல் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்திய மக்களில் பலரும் ஃபீச்சர்…

கைப்பேசி தயாரிப்பில் பெயர் பெற்ற நிறுவனமான நோக்கியா, தற்போது யுபிஐ வசதியுடன் நோக்கியா 105 மற்றும் 106 4ஜி என்ற புதிய மாடல் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்திய மக்களில் பலரும் ஃபீச்சர் போன்களுக்கு மாறி வருகின்றனர். ஏனென்றால், அதில் டேட்டா கம்மியாக செலவாகும், பேட்டரி நீண்ட நேரம் வரும், எப்போதும் போனில் மூழ்கி இருக்க தோன்றாது. இப்படி பல நன்மைகள் பீச்சர் போன்களில் இருக்கிறது. அந்த வரிசையில் இந்தியாவில் HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 105 மற்றும் நோக்கியா 106 4ஜி ஆகிய இரண்டு புதிய ஃபீச்சர் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு போன்களும் என்பிசிஐ நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நோக்கியா 105 ஆனது 1000 எம்ஏஎச் பேட்டரியையும், நோக்கியா 106 4ஜி 1450 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு போன்களிலும் வயர்லெஸ் ரேடியோ  வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, நோக்கியா 106 4ஜி போனில் எம்பி3 பிளேயர் வசதியும், புளூடுத் V5 வசதியும் கொண்டுள்ளது. இந்த போன்களின் விற்பனை இந்தியாவில் இணையதளம்  வழியாக தொடங்கியுள்ளது. நோக்கியா 105 இன் விலை ரூ.1,299 ஆகவும், நோக்கியா 106 4ஜி விலை ரூ.2,199 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில் டிஜிட்டல் பேமெண்ட் வசதி தேவைப்படுவதால், அது ஃபீச்சர் போன்களுக்கு பெரும் பின்னடைவாகவே இருந்து வந்தது. இதை உடைத்தெறியும் வகையில் நோக்கியா நிறுவனம், தனது இரண்டு ஃபீச்சர் போன்களிலும் யுபிஐ பேமெண்ட் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த வசதி மூலம் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். இந்த இரண்டு நோக்கியா ஃபோன்களிலும் உள்ளமைக்கப்பட்ட UPI 123PAY அம்சம் உள்ளது. இதன் உதவியுடன் பயனர்கள் ஸ்மார்ட்போன்களைப் போலவே ஃபீச்சர் ஃபோன்களிலிருந்தும் யுபிஐ மூலம் பணம் செலுத்தவோ, பெற்றுக்கொள்ளவோ முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.