இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை என ஓபிஎஸ் அணியை சார்ந்த பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுகவில் இபிஎஸ் அணி தரப்பில் தென்னரசு என்பவரையும், ஓபிஎஸ் அணி தரப்பில் செந்தில் முருகன் என்பவரையும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டதால் தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டன. “அதிமுக வேட்பாளரை கட்சியின் பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும். ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் படிவம் வழங்கவேண்டும்.” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து பொதுக்குழு உறுப்பினருக்கும், தென்னரசுக்கு ஆதரவுக் கோரி படிவம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் அணியினர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு ஓபிஎஸ் அணி மூத்த நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் கூறுகையில், “தென்னரசின் பெயரை மட்டும் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக போட்டியிடுவதாக படிவத்தில் அறிவித்துள்ளனர்.
அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்யவேண்டும். அப்படி இருக்கும்போது தமிழ்மகன் உசேன் முன்கூட்டியே ஒருவரை வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால் அவர்கள் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர் என தெரிகிறது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். வேறு வேட்பாளர்களை முன்மொழியும் எந்த அம்சமும் இந்த படிவத்தில் இல்லை. இதில் தென்னரசை ஆதரிக்கிறீர்களா இல்லையா என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் அறிவித்த வேட்பாளர் பெயர் இல்லை. இதர போட்டியாளர்கள் போட்டியிடும் உரிமையை தட்டிப் பறிக்க தமிழ்மகன் உசேனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி, எடப்பாடி பிரிவின் முகவராகவே செயல்பட்டிருக்கிறார். உச்ச நீதிமன்ற நடுநிலையாக தீர்ப்பு வழங்கியிருந்தாலும், தமிழ்மகன் உசேன் ஒருதலைபட்சமாக தன்னிச்சையாக செயல்படுகிறார். அதேநேரத்தில் இரட்டை இலை சின்னம் எங்கிருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவளிப்போம்.” என்றவர் செய்தியாளர்கள் மேற்கொண்டு எழுப்பிய கேள்விகளுக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில்,” உச்ச நீதிமன்றம் பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய சொல்லி உத்தரவிட்டது. தமிழ் மகன் செய்வது வேட்பாளரை அறிவித்துவிட்டு அதற்கு வாக்கெடுப்பு நடத்துவதாகும். இந்த சட்டவிரோத செயலுக்கு நாங்கள் உடன்படமாட்டோம். உச்ச நீதிமன்றம் சொன்னதை அவை தலைவர் நேர்மையாக செயல்படுத்தவில்லை. இதுகுறித்து சட்ட ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
-ம.பவித்ரா








